Sunday, February 25, 2018

இலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்!

எனக்கு சிறுவயதில் இருந்தே பயணத்தில் ஆர்வம் இருந்து வருகிறது. இதுவரை உள்ளூரை மட்டும் சுற்றித் திரிந்த நான் இந்த முறை கடல் கடந்து பக்கத்து நாட்டிற்கு அலுவல் பணியின் காரணமாக வர நேர்ந்தது. ஓரிடத்தில் தொடங்கி மற்றொரு இடத்திற்கு போகும் போது அதனைப் பற்றி சிறு குறிப்புகளை எழுதுவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி ஏதும் குறிப்புகள் எடுக்காமல், பயணம் மேற்கொண்டது முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை யாரெனும் ஓர் முகம் எனக்கு உதவியாக இருந்து கொண்டு தான் உள்ளது.

சரி வாருங்கள் நாம் மேலும் பயணிப்போம்.



ஒன்றை ஒன்று பின்னிக்கொள்ளும் மேகம்,
அதைப் பிழிந்து குடிக்க ஏங்கும் தாகம்,
மேகங்களுக்கு குடை விரிக்கும் வானம்,
அதன் நிழலில் பறக்கிறேன் நானும் சென்னையிலிருந்து இலங்கையை நோக்கி.

பகல் நேரத்தில் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்த நான் இங்குள்ள ஓர் சகோதரரின் உதவியுடன் டாக்சி மூலம் விடுதியை வந்தடைந்தேன். இரவு 7 மணியளவில் இங்குள்ள அலுவல் பணிக்காக புதிதாக அறிமுகமான நண்பர்களுடன் யாழ்ப்பாணத்தை நோக்கி எனது பயணம் தொடங்கியது.

நின்ற நிலா தேய்ந்ததென்று எனது விழியிரண்டும் தான் தேட, வெள்ளியில் முளைத்த முத்துக்களாய் பல நட்சத்திரங்கள் நிலவுடன் சேர்ந்து கொண்டு வானில் இருந்து எங்களை கண்டு கண் சிமிட்டும் ஓர் அழகிய இரவில் பிறைமதி பின் தொடர பனி பொழிவில் எனது பயணம் யாழ்ப்பாணம் நோக்கி அமைந்தது.

கிட்டத்தட்ட 405 கீமீ தொலைவு. செல்லும் இடமெங்கும் அடர்ந்த வனம் தான் காட்சியளிக்கிறது. யானைகள் எல்லாம் சாலையில் வரிசையாக சென்றதை கண்ட போது இது சாதாரண பயணம் அல்ல சாகச பயணம் தான் என உணர்த்தியது.

விடியலில் யாழ்ப்பாண தமிழ் பேரன்புடன் என்னை வரவேற்றது. அடடா யாழின் ஓசையை விட யாழ்ப்பாண தமிழ் இனிமையானது தான்.

முதல் நாளில் எங்கும் செல்ல நேரமில்லை. இரண்டாம் நாள் அதிகாலையில்
நல்லூர் கந்தசாமி கோவிலுக்கும், நாக விஹாரத்திற்கும் சென்று வந்தேன். நல்லூர், இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழர்களின் இராசதானியாகவும், 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டு முற்பகுதிவரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாகவும் நல்லூர் விளங்கியது.



யாழ்ப்பாண அரசிற்கு சிறப்புச் சேர்த்துள்ள நல்லூர், யாழ் நகரில் இருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிசெய்த ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கலிங்கமாகன் அல்லது கூழங்கை சக்கரவர்த்தியால் கட்டுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலையில் கூறப்பட்டுள்ளது (கை ஊனமான நிலையில் உள்ளதால் இந்த அரசன் கூழங்கைச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டான்).



எனினும் 15ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பதினேழு ஆண்டுகள் ஆட்சி செய்த சிங்கள அரசின் பிரதிநிதியும், பிற்காலத்தில் ஸ்ரீ சங்கபோதி 7ஆம் புவனேகபாகு என்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்ட கோட்டை அரசனான ஸ்ரீ சண்முகப்பெருமாள் என்பவனால் இக்கோவில் கட்டப்பட்டதாகவும் வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

நல்லூர் கந்தசுவாமி கோவில் முத்திரைச் சந்தியிலுள்ள ‘குருக்கள் வளவு’ என்ற காணியில் கட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கச்சேரியில் 1882ம் ஆண்டு உருவாக்கபட்ட சைவசமயக் கோவில்கள் தொடர்பான பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரில் இருந்த மிகப்பெரிய கோவில் இது என போர்த்துக்கேயர்களுடைய குறிப்புக்களில் இருந்து அறியமுடிகிறது.

அத்துடன், யாழ்ப்பாண மன்னனான ஆரியச்சக்கரவர்த்திகளின் அரண்மனையை அண்டிய பகுதியிலேயே பழைய கோவில் அமைந்திருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன. யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் நல்லூரை மையமாக வைத்து கிழக்கில் வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும், தெற்கில் கைலாசநாதர் கோயிலையும், மேற்கில் வீரமாகாளி அம்மன் கோயிலையும், வடக்கில் சட்டநாதர் கோயில் என ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் அரண்களை அமைத்திருந்தார்கள். கோவிலினுள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.

ஐந்து நாட்கள் என்னால் முடிந்த வரை வேலையினுடே அனைவருடனும் பல விடயங்களை பேசினேன். தமிழகத்தில் இருந்து வருபவன் என்ன கேட்பானோ அதற்கான விடையும் கிடைக்கத் தான் செய்தது.

நான்காவது நாள் மாலையில் என்னை படகில் ஓர் தீவிற்கு அழைத்து சென்றனர். வாழ்வில் மறக்க முடியாத தருணம். கடலில் இரண்டு மணி நேரம் பயணம் செய்யும் அனுபவம் கிட்டியது. அலைகடலில் சிறிய படகில் நீர்த்துளிகள் முகத்தில் தெறிக்க அலைகள் ஆர்ப்பரிக்க படகை செலுத்தினார்கள். அடடா எவ்வளவு அழகாக மீனை வலை கட்டி பிடிக்கிறார்கள்? பிடித்தது மட்டும் இல்லாமல் அவற்றை எங்களுக்காக அவரது தாயிடம் தான் பிடித்த 25-30 மீன்களை கொடுத்து சமைத்து தந்து பறிமாற வயிறு மட்டும் அல்ல மனமும் நிறைந்தது. நான்கு நாட்கள் பழகிய என்னிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்தும் இவர்களுக்கு நன்றியை மட்டும் சொல்வது முறையாகுமா?




எந்தன் இதயத்தில் ஆழ பதிந்துவிட்டன அவர்களின் நினைவுகள் என்றும் பசுமையாக... மீண்டும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புவிற்கு இரயிலில் பயணம் செய்யும் அனுபவம் கிட்டியது. அடர்ந்த வனத்தின் ஊடேயும், கடற்கரையினுடேயும், ஆறுகள் மற்றும் வயல்களின் ஊடேயும் பயணிப்பது ஓர் பெரும் உற்சாகத்தை கொடுத்தது.

இதுவே தொடர்ந்து இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இடையில் 25 நிமிடங்கள் செல்லும் வழியில் வனமும், ஓர் மனித நடமாட்டமும் இல்லை. போரின் முடிவில் நடந்த கோர காட்சிகள் இன்னும் சுவடுகள் மறையாமல் கண்ணெதிரே... கண்களின் ஓரம் கண்ணீர் வந்ததை சிறிது நேரத்திற்கு தடுக்க முடியவில்லை. முகாமில் இருக்கும் மக்களுக்கு நகங்களை பிடுங்குவதும், நகங்களின் இடையே ஊசியை நுழைப்பதும் சர்வ சாதரணமாக நடக்கிறது. மேலும் விவரிக்க வார்த்தைகள் இல்லை.



இரண்டு நாட்கள் அலுவல் பணியின் காரணமாக கொழும்பில் தங்க நேர்ந்தது. அதனூடே அங்குள்ள கடற்கரையின் அழகையும், உலக வர்த்தக மையத்தையும் மற்றும் சில இடங்களையும் ரசித்தேன்.



இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் எனது தாத்தா (தந்தையின் தந்தை) என்னை இலங்கையில் சில இடங்களுக்கு அழைத்து செல்வது போல் கனவு. காலையில் தந்தையிடம் விவரத்தை கூற அவருக்கு ஒரே ஆச்சரியம். இதுவரை நான் அவரின் புகைப்படத்தை தவிர நேரில் கண்டதில்லை. இலங்கையில் சுமார் 30 வருடங்கள் பணியாற்றி இருப்பதாக தந்தை கூறினார். இங்கு இலங்கையின் பல இடங்களுக்கு அவரே எனக்கு வழிகாட்டி செல்வது போல் தோன்றும் இந்த நிலைக்கு எனது பிரமையா அல்லது நிகழ்வுகளின் தொகுப்பா என வரையறுக்க முடியவில்லை.

அவர் வேலை செய்த நிறுவனத்தை தேடி சென்றேன். அவரை பற்றிய தகவல்களை ஆர்வத்தில் கேட்க காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் இன்றைய தலைமுறைகள் அறியவில்லை என தெரிந்தது. என்றோ ஓர் நாள் நான் நடந்த வீதிகளில் அவரும் நடந்திருப்பார் தானே? முப்பது வருடங்கள் அந்த காலங்களில் சாதாரணமாக கடந்துவிடாது. தனது பேரன் தான் வாழ்ந்த இடத்தை நோக்கி வருவான் என்று நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.

இது அவர் வாழ்ந்த மண்.ஓர் வகையில் எனக்கும் சொந்தமான ஊர் தானோ?

கொழும்பில் இருந்து நுவரெலியாவிற்கு நான்கு சக்கர வாகனத்தில் பயணம். நகரத்தின் ஓசை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து காட்டின் ஓசை எழும்பும் கணத்தை கவனித்து பாருங்கள். அழகிய வண்ணம் தரித்த இயற்கை அன்னை,கண்களுக்கு குளுமையும் மனதிற்கு மகிழ்ச்சியையும் அளிக்கிறாள்.




காதை நிறைக்கும் காட்டின் இசையும், சுவாசத்தை நிறைக்கும் வனத்தின் சுகந்தமும், வெய்யோனின் கதிர்களை புறக்கணித்து உடலில் ஊடுருவும் மெல்லிய குளிரும்!! அடடா வாழ்வின் சொர்க்கம். வனப்பும் செழிப்பும் வளமும் பசுமையும் மலைகளும் நிறைந்த பகுதிகளாகவே கண்களுக்கு எட்டிய தூரம் கவி பாடுகின்றன. கேரளத்தை போன்று இருமடங்கு இயற்கை வளம் நிறைந்துள்ளது எனலாம்.



நுவரெலியாவில் தட்பவெப்ப நிலை பகலில் அதிகபட்சமாக 17° யும் இரவில் 6° வரையும் செல்கிறது. நுவரெலியா மலையகத்தில் அமைந்துள்ள ஓர் கண்கவர் நகரமாகும். வானுயர்ந்த மரங்களும், தேயிலை தோட்டங்களும், காய்கறி தோட்டங்களும் கனிகளும் நிறைந்து காணப்படுகின்றது. சற்று உங்கள் கற்பனைகளை தட்டி விட்டால் உங்கள் மனதில் தோன்றும் காட்சிகளை நான் இங்கு ரசித்து கொண்டு இருக்கிறேன்.



நுவரெலியாவில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சீதைக்கோவில். அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சுமிடத்தில் நதியின் பிரவாகத்தில் அமைந்துள்ள சீதா எலிய என்ற இவ்விடமே இராவணன் சீதையை சிறைப்பிடித்து வைத்திருந்த அசோகவனம் எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அருகில் இருந்த பழைமையான கட்டிடங்களையும், கோல்ப் மைதானத்தையும், குதிரை பந்தய மைதானத்தையும் ஏரியையும் கண்டு ரசித்து வந்தேன்.



வானம் கிழிந்து போனது, வீதிகளை மேவி வெள்ளம் வீடுகளில் முட்டியது, மரமெல்லாம் பாறி நிலமெல்லாம் நீர் கசிவாய் சிதம்பியது கடும் குளிருடன்!

பனங்காய் பலகாரம், பயித்தம் பலகாரம், பருத்திதுறை வடை, அப்பம், பருத்திதுறை தோசை, பிட்டு-சம்பல்-சொதி, தொதல், கிழங்கு ரொட்டி, கொத்து ரொட்டி, சோறு-கறி, அண்ணாசி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, மாங்கனி பழம் போன்ற உணவுகளை யாழ்ப்பாணத்தில் சுவைக்க மறவாதீர்கள்.




கொழும்பில் Ministry of Crab உணவகத்தில் நண்டு வகைகள், இறால் மற்றும் ஆக்டோபஸ் போன்ற கடல் உணவு வகைகளை ருசி பார்க்கலாம். நுவரெலியாவில் காலை, மதியம், இரவு என அனைத்து வேலைகளும் Pizza, burger, fried rice போன்ற உணவுகள் கிடைக்கப்பெறும். 

மொத்தத்தில் இலங்கை பயணம் ஓர் மறக்கவியலா பயணம்!


இலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்!

#067/2018
2018.02.24
இலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்!     
https://www.sigaram.co/preview.php?n_id=294&code=uHDqMm5T  
பதிவர் : சரவண மணியன் 
#சிகரம் #பயணம் #பயணஅனுபவம் #இலங்கை #மலையகம் #ஈழம் #SIGARAM #SIGARAMCO #TRAVELLING #LKA #SRILANKA #CEYLON #MALAIYAGAM #EALAM

No comments:

Post a Comment